உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குள்பட்ட சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்கத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சவுடு மண் எடுக்க, உபரி மண் எடுக்க என அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் பலவேறு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள் 13 மாவட்டங்களில் மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்..
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நர்மதா சம்பத் மணல் கடத்தல் தடுப்பு குறித்த எடுக்கப்பட்ட அறிக்கையைத் தாக்கல்செய்தார். அந்த அறிக்கையில், ”நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கனிமவளத் துறை, காவல் துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்
இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 3553 டிப்பர் லாரிகளும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 3717 வழக்கு (FIR) பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக மணல் கடத்திய நபர்களிடமிருந்து ரூபாய் 74 லட்சத்து 26 ஆயிரத்து 958 அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் பயன்படுத்திய 244 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடவர்களிடம் ருபாய் 9 கோடி அபராதம் விதக்கபட்டுள்ளது. 12 பேர் கைது செய்யபட்டுள்ளார்கள் இதில் 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், மணல் கடத்தல் தடுக்கும்விதமாக கனிமவள விதிகளில் சில திருத்தங்கள் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்..
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மணல் கடத்தல் தடுப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கின் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு குறித்த தகவல்களை அரசுத் தரப்பில் தாக்கல்செய்ய உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை நவம்பர் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.