மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கரோனா தடுப்பு மருந்து வரும்வரை விழிப்புணர்வு பணிகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தும். மேலும் மதுரை மாவட்டத்தில் 60 விழுக்காட்டினர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்,
மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,10,864 கரோனோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை மாதிரிகளை சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் முடிவுகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் கரோனா பரிசோதனை கருவிகளை அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் கரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக மாற்ற நடவடிக்கை, தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை, கரோனாவால் எந்த ஒரு பணியும் பாதிக்கப்பட கூடாது என அனைத்துத் துறைகளும் பணியாற்றி வருகின்றன.
மேலும் மின் கட்டண உயர்வு குறித்து திமுக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. ஏனெனில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். திமுக நடத்திய மின் கட்டணம் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மின் கட்டணம் குறித்து தமிழ்நாடு அரசு விரிவான விளக்த்தை கொடுத்துள்ளது” என்றார்.