மதுரை- டெல்லி நிஜாமுதீன், தாம்பரம், நாகர்கோயில், புதுச்சேரி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை - டெல்லி நிஜாமுதீன், மதுரை - சென்னை, தாம்பரம் - நாகர்கோவில் (அந்தியோதயா), புதுச்சேரி - கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
1. வண்டி எண் 06155 மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில், ஏப்ரல் 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மதுரையிலிருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகாலை 12.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 06.35 மணிக்கு நிஜாமுதீன் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06156 டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 05.20 மணிக்கு புறப்பட்டு வியாழன் மற்றும் சனிக்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, பல்ஹார்ஷா, நாக்பூர், போபால், ஜான்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. வண்டி எண் 06158 மதுரை - சென்னை எழும்பூர் வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில், மதுரையிலிருந்து ஏப்ரல் 17 முதல் மறு அறிவிப்பு வரும் வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 06.55 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் - மதுரை வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில், சென்னையிலிருந்து ஏப்ரல் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 08.10 மணிக்கு மதுரை சென்று சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. வண்டி எண் 06191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில், தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 26 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 02.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06192 நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 27 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாலை 03.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
4. வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில், நண்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06862 கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 12 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 01.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு புதுச்சேரி சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி - புதுச்சேரி சிறப்பு ரயில் சீர்காழி, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடை காலத்தில் கிராமப்புறங்களுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்க- நவீன் பட்நாயக்