மதுரை: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தால் திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதி ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் படி திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண் - 06829) டிசம்பர் 31 வரை திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.15 மணிக்கு, 120 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் (டிச.25) போன்ற நாட்களில் வழக்கம் போல் திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும். மேலும், திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில்கள் (வண்டி எண்= 16849/16850) வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் (டிச.25) தவிர டிசம்பர் 31 வரை மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.
பாம்பன் பால பணிகள் காரணமாக இந்த ரயில் ஏற்கனவே இராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரயில் மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மதுரை-போடி ரயில் பாதை மின்மயமாக்கல் எப்போது முடிவடையும்? - தெற்கு ரயில்வே தகவல்