கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தும் விதமாக மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களை ரத்து செய்ய அரசு தென்னக ரயில்வேயிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி தற்போது தென்னக ரயில்வே ரயில் சேவையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 31.7.2020 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களின் சேவையும் 15.7.2020 வரை ரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை 31.7.2020 வரை நிறுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி 16.7.2020 முதல் 31.7.2020 வரை வண்டி எண் 02636/02635 மதுரை - விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 02627/02628 திருச்சி - நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
இதே போல கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களும் 31.7.2020 வரை ரத்து செய்யப்படுகின்றன" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காளையின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய துணை முதலமைச்சரின் மகன்!