மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கவிதா என்பவரை காதல் திருமணம் செய்தார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பின்பும் இத்தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை.
இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார், கவிதா வீட்டிற்குச் சென்று அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனைத் தடுக்க வந்த கவிதாவின் தாயார் லெட்சுமியின் காதை முத்துக்குமார் கடித்து துப்பியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து முத்துக்குமாரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் லெட்சுமியை மீட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
குடும்பத் தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய முத்துக்குமாரை சமயநல்லூர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.