இந்தியா முழுவதும் டாக்டர் அம்பேத்கர் 128வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக, மதுரை அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய நாட்டின் இறையாண்மையை காப்பதற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்தவருக்கும் உரிமையை பெறுவதற்கான சட்டத்தை, இரவு பகல் பாராது எழுதியவர் அண்ணல் அம்பேத்கர். இந்த நாடு இருக்கும்வரை, இந்த மண் இருக்கும்வரை அம்பேத்கரின் புகழ் நிலைத்திருக்கும். நாட்டில் 130 கோடி மக்கள் இருந்தாலும், ஒற்றுமையாக இருப்பதற்கு அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த சட்டம்தான் காரணம். இதனை இன்றைய தலைமுறையினர் அவரை எண்ணிப் பார்க்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.
பாஜக, அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்படுகிறது என்று கம்யூனிஸ்ட்கள் குற்றச்சாட்டுவது குறித்த கேள்விக்கு, அவர்களுக்கு மக்களிடத்தில் ஆதரவில்லை. தோல்வி பயத்தில் உள்ளனர். மத்திய, மாநில அரசின் மீது எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் இரண்டு அரசுகள் மீது குறைகள் சொல்ல முடியாது. அதனால், தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்றனர், என்றார்.
பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், அதிமுக சார்பாக ராஜன் செல்லப்பா, ராஜ்சத்யன் உள்ளிட்ட பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.