தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மே19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரபரப்புரையை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்புரையைத் தொடங்கினார்.
தனக்கன்குளம் பகுதியில் பரபரப்புரையை மேற்கொண்டபோது செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம், சத்துணவுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தொடங்கினார்கள். திமுக வேட்பாளர் சரவணனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதியைப் பற்றி எதுவும் தெரியாது. மதுரை வடக்கு தொகுதியை சேர்ந்தவரான அவர் ஒரு இறக்குமதி வேட்பாளர். பல கட்சிகளுக்கு இடம்மாறியவர். ஆனால் அதிமுக வேட்பாளர் முனியாண்டி கட்சி பதவியில் இல்லையென்றாலும் கட்சியில் பணி செய்யக்கூடியவர். திருப்பரங்குன்றம் பகுதியில் துணைக்கோள் நகரம், எய்ம்ஸ் மருத்துவமனை என பல திட்டங்களை ரூ.60,000 கோடி செலவில் அதிமுக அரசு செயல்படுத்த உள்ளது எனப் பேசினார்.