ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த மூன்று நாள்களாக சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் காவலில் உள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா ஆகிய ஐந்து பேரையும் ஐந்து நாள்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி, சிபிஐ காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) விஜயகுமார் சுக்லா தலைமையில் மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிபிஐ தரப்பு மனுவானது நாளை (ஜூலை 14) காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கு விசாரணையின்போது ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேரையும் நேரில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொலை வழக்குத் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள், லத்திகள், ரத்தக்கறை படிந்த துணிகள் ஆகியவை மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.