ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "சித்தார்கோட்டை கிராமத்தைச் சுற்றி ஜமீன்தார் வலசை, தமிழர்வாடி சமத்துவபுரம், குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து 800 முதல் 1000 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதால், விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் அலுவலர்கள் சட்டவிரோதமாக இந்தக் கிராமங்களில் மணல் அள்ளி வணிக ரீதியில் விற்பனை செய்து வருகின்றனர். இது கனிமவள விதிக்கு எதிரானதாகும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், பொக்லைன் மூலமும் 15 அடி வரை ஆழமாகத் தோண்டி மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் உட்புகும் நிலை உள்ளது. இதனால் விவசாயமும் பாதிக்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் சவடு மண் எடுப்பதற்கான அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று மதுரைக் கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவடு மண் அள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நேரில் ஆஜராகி தான் தொடர்ந்த பொதுநல வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறினார். அதற்கான காரணங்களை விசாரித்த நீதிபதிகள், மனுவை மனுதாரர் திரும்பப் பெற முடியாது என்றும், வேண்டுமென்றால் மனுதாரரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்றோம் என்றும் கூறினர். மேலும், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’சென்னையில் காற்று மாசு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்