மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கடைகள் திறப்பு நேரத்தை மீண்டும் குறைத்து சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் , தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை ஜீவல்லர்ஸ் & புல்லியன் மெர்ச்செண்ட்ஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா நோய்த் தொற்று விரைந்து பரவுவதை தடுப்பதற்கான அனைத்து சங்கங்களின் கூட்டுக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அச்சங்கங்களின் சார்பாக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்பொழுது கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள நேரத்தை வருகின்ற 23/06/2020 முதல் 30/06/2020 வரை, காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளுக்கு முழு விடுமுறை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர், நிர்வாகத்தின் அனைத்து செயல்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கரோனா தொற்று பரவாத வண்ணம் உறுதுணையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளனர்.