மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீட் எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
நீட் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவையும் நனவாக்கும் விதமாக, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.
காட்டாற்று வெள்ளம் போல் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 லட்சம் அதிமுக தொண்டர்கள் மதுரை மாநாட்டிற்குப் புறப்பட்டு உள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால் மதுரையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலேயே காவல்துறை போக்குவரத்து மாற்றம் என்ற பெயரில், அதிமுகவினர் வாகனங்களை திசை திருப்பினர். தொண்டர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு போராடி தான் மாநாட்டிற்கு வந்திருந்தனர்.
காட்டாற்று வெள்ளம் போல் புறப்பட்டு வந்த அதிமுகவினரை தடுத்து நிறுத்திய காவல் துறையைக் கண்டிக்கிறேன். அதையும் மீறி லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாநாட்டு திடலுக்கு வந்து சென்று உள்ளனர். அதிமுக எழுச்சி மாநாட்டு வெற்றியை மறைக்கும் விதமாக, உணவு வீண் என பொய்யான செய்தியை பரப்புகின்றனர். இது மன வேதனை அளிக்கிற விஷயம்.
10 லட்சம் தொண்டர்கள் சாப்பிட்ட பிறகு, மீதமான சிறு அளவு உணவு, பாத்திரத்தை எடுத்து செல்லும் போது ஆங்காங்கு சிதறிய உணவை மிகைப்படுத்தி படம் வெளியிட்டு இருக்கிறார்கள். இது மாநாட்டு வெற்றியை மறைக்கிற செயல். எடப்பாடி பழனிசாமி மதுரை வர முடியாது, தென் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் கூறிக் கொண்டு இருந்தவர்களுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.
மதுரை மக்கள் மட்டுமல்ல உலகமே புரட்சித் தமிழர் என பட்டம் சூட்டி பாராட்டி மகிழ்ந்து இருப்பது, ஜெயிலர் படத்தை விட அதிகமாக உலகம் முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது. திமுகவினர் அறிவிக்கும் அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கும். எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் அறிவிப்பு அகிலம் பேசும் அறிவிப்பாக இருக்கும்.
9 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி புரிந்த பிரதமர் மோடி, மறுபடியும் பிரதமராக வேண்டும் என தலைநகர் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தைப் பொருத்த வரை இரண்டரை கோடி அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, எட்டு கோடி தமிழ் மக்களின் லட்சியக் கனவு, எடப்பாடி பழனிசாமி மறுபடியும் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதே" எனத் தெரிவித்தார்.