மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். ஏழு ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், அரசியல் தலையீடு காரணமாக நான் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலமும் பாதிக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டமும், மனித நேய அடிப்படையில் வழிவகுக்கிறது.
விடுதலை செய்ய கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்க கோரி மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன் இன்று (செப். 7) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் நளினி தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா சோதனை - ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு