மதுரை மாவட்டத்தில் ஜோயல் என்ற விவசாயி மிளகு சம்பா எனும் நெல் ரகம் பயிரிட்டு விளைச்சல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு விவசாயிகள் மட்டுமே இந்த வகை சம்பாக்கள் பயிரிடப்பட்டு வருகின்றது.
இந்த மிளகு சம்பா அதன் பெயருக்கு ஏற்றவாறு உருண்டையாகவும், மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். இயற்கை வேளாண்மை முறையில் இதனை பயிரிட்டு விளைச்சல் செய்துள்ளார் விவசாயி ஜோயல்.
இதுகுறித்து பேசிய அவர், "சம்பா வகை அரிசி ரகங்களில் 'மிளகு சம்பா' தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆனால் இதனை பயிரிடுவதற்கு பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இதன் விளைச்சல் காலம் சற்று அதிகம்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நான் ஒருவன்தான் இதனைப் பயிரிட்டு தற்போது விளைச்சலுக்கு எடுத்துள்ளேன். 145 முதல் 150 நாட்கள் வரை இதன் விளைச்சல் காலம் இருக்கும். வழக்கமாக மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா போன்ற ரகங்களை பயிரிட்டு வருகின்ற நாங்கள் இந்த முறை மிளகு சம்பாவை பயிரிட்டுள்ளோம்.
வேளாண் அறிஞர் சுபாஷ் பாலேக்கர் வழிகாட்டுதலில் முழுவதும் இயற்கை வேளாண்மை சார்ந்த பண்ணை முறைகளையே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது மிளகு சம்பா நெல்லுடன் கர்நாடகாவை சேர்ந்த மண் ரகமான நவரா என்ற ரகத்தையும் நாங்கள் பயிரிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இயற்கை வேளாண் அறிஞர் பாமயனிடம் கேட்டபோது, " வழக்கமாக எல்லா நெல் ரகங்களுக்கும் என்ன மாதிரியான மருத்துவ குணங்கள் உண்டோ அதே போன்ற தன்மை மிளகு சம்பாவுக்கும் உண்டு. வழக்கமாக எல்லா நகைகளையும் உமி பிரித்து பட்டை தீட்டுதல் என்ற பெயரில் அதில் உள்ள சத்துக்களை நாம் நீக்கி விடுகிறோம்.
இந்த மிளகு சம்பாவை பொருத்தவரை அதேபோன்று உருண்டையாக இருப்பதால் பிரியாணி போன்ற உணவு பதார்த்தங்களுக்கு இது ஏற்ற ஒன்றாக இருக்கும். இந்த நெல் ரகங்களை சரியான முறையில் பிரித்து எடுப்பதற்கு தமிழக அரசு உரிய அரவை மில்களை ஏற்படுத்தி கொடுத்தால் எங்களை போன்று நிறைய விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும்" என்றார்.