மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சிறையில் இருந்த 7 பேரை உச்சநீதிமன்றம், கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்தது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த நான் தற்போது வரை திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளேன்.
எனது மனைவி நளினி மற்றும் மகள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், 32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இனிமேல் லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க இலங்கை தூதரகத்தை ஆன்லைன் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதால், இது குறித்து உயரதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க அதிகாரிகள் அனுமதி தர உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மனு குறித்து தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலாளர் மற்றும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழக அரசு மீது களங்கம் விளைவிக்க அமலாக்கத்துறை முயல்கிறது - திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ பேட்டி!