மதுரை: கரோனா தொற்று முதல் அலையின்போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய விரைவு ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன.
தற்போது அந்த விரைவு ரயில்கள் வழக்கமான ரயில்களாகப் பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கின்றன. சிறப்பு ரயில்கள் சேவை வழக்கமான ரயில் சேவைகளாக மாறுவதால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வசதியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரை கோட்டம் நேற்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சிறப்பு ரயில்கள் சேவை வழக்கமான ரயில் சேவைகளாக மாறுவதால், ரயில்வே முன்பதிவு திட்டத்தில் படிப்படியாக ஒவ்வொரு ரயிலாக வண்டி எண், கட்டண விதிப்பு போன்றவை கவனமாக மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.
இதற்காக முன்பதிவு வசதி அதிகப் பயன்பாடு இல்லாத நேரமான இரவு 11.30 மணிமுதல் அதிகாலை 5.30 மணிவரை ஏழு நாள்களுக்குப் பயணச்சீட்டு முன்பதிவு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட இருக்கிறது.
தற்காலிக நிறுத்தம்
நவம்பர் 14 இரவு 11.30 மணிமுதல் நவம்பர் 21 அதிகாலை 5.30 மணிவரை ரயில் முன்பதிவு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்தச் சேவை நிறுத்தப்பட்ட நேரத்தில் இணையதளம் வாயிலாகப் பயணச்சீட்டு பதிவுசெய்வது, ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் ஈடுபட முடியாது" என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி - கட்டணமும் குறையுது மக்களே!