மதுரை: அரசு இராசாசி மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில், அரசு மருத்துவமனை சார்பாக, தடுப்பூசி மையம் செயல்பட்டுவருகிறது.
இவ்விடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு டோக்கன் முறையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பூசிக்கான டோக்கன்கள் அதிகாலை வழங்கப்படுவதால் இன்று (ஜூன் 30) காலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் தகுந்த இடைவெளியின்றி குவிந்தனர்.
தடுப்பூசி இல்லை
இதனையடுத்து திடீரென தடுப்பூசி கையிருப்பு இல்லை எனப் பணியாளர்கள் கூறியதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினரிடையே பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான அறிவிப்பு இல்லாத நிலையில் பொதுமக்களை இப்படித்தான் அலைக்கழிப்பதா எனக் கேள்வி எழுப்பினர்.
சாலை மறியல்
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அரசு மருத்துவமனை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால் எந்தத் தேதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என நிர்வாகம் பதில் அளிக்காத நிலையில், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி மையங்களை அந்தந்தப் பகுதிகளிலேயே அதிகப்படுத்தினால், இதுபோன்று ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க முடியும் எனவும், தடுப்பூசி மருந்து இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு