மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர் (44). இவர் புனேவில் உள்ள 3ஆவது ராணுவ இன்ஜினீயரிங் பிரிவில் துணை ராணுவ அலுவலராக பணியாற்றினார்.
இந்நிலையில் பிப்.20ஆம் தேதி பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்ய நேற்று மதியம் சொந்த ஊரான திருப்பரங்குன்றம்-விளாச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு புனேவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. கடந்த 26 ஆண்டுகள் இந்திய ராணுவத்திற்காக பணியாற்றியுள்ளார்.
அப்துல் சுக்கூர் 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்தார். அதேபோல் பணியில் சேர்ந்த அதே நாளான பிப்.20ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இவருக்கு மமூசீனா (18) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் முன்தஸீர் (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அப்துல் சுக்குரின் வருமானத்தை நம்பியே குடும்பத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இவரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளின் இழப்பீடுத் தொகையை நாங்கள் தருகிறோம் - உலக சுகாதார அமைப்பு