கரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் தவிர்த்து, இதர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கரோனா காலத்தில் பள்ளிகள் திறக்க முடியாத நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்குச் சென்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பை மாநில அரசு திரும்ப பெற்றது.
மாநிலத்தில் ஊரடங்குக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகளுக்கான தடை நீக்கப்படவில்லை. இருப்பினும் மதுரையில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவ, மாணவியரை பள்ளிகளுக்கு வரவழைத்து அரசின் விதிகளை மீறி வகுப்புகளை நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோரும் தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி செயல்படுகின்ற பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க 'கேடயம்' செயல்திட்டம்!