17ஆவது மக்களவைத் தேர்தல் திருவிழா நாளை களைகட்டவிருக்கும் நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியிலும் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மதுரையில் நாளை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேரோட்ட திருவிழா நடைபெறும் மாசி வீதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தடையின்றி வந்து வாக்களித்து செல்வதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகம் செய்துள்ளது.
மாசி வீதிகளில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மிக பாதுகாப்போடு அனுப்பப்பட்டுள்ளன. வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் மூன்று வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி அலுவலர்கள் தற்போது இருந்து தங்களது முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை கணக்கில் கொண்டு தேர்தல் ஆணையம் கூடுதலாக இரண்டு மணிநேரம் வாக்குப்பதிவுக்கு நேரம் ஒதுக்கியுள்ளதால் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..