மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளர் வசந்தி ஐந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தனிப்படையினர் விசாரித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வழக்கில் தொடர்புடைய பால்பாண்டி, செட்டியார் என்ற உக்கிரபாண்டி, கார்த்திக் என்ற சீமைச்சாமி ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
காவல் ஆய்வாளரைப் பிடிக்க அறிவுறுத்தல்
இதனிடையே காவல் ஆய்வாளர் வசந்தியின் சார்பில் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் காவல் ஆய்வாளரைக் கைதுசெய்து முன்னிறுத்த வேண்டும் எனக் காவல் துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து வசந்தியை கைதுசெய்ய தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகத் தேடிவந்தனர். அவரது செல்போன் எண்ணை சோதனை செய்ததில், வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் உடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கியிருந்தது உறுதிசெய்யப்பட்டது.
மதுரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு விடுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்து மதுரைக்கு அழைத்துவந்தனர்.
செய்தியாளரைத் தாக்க முயற்சி
நேற்று (ஆகஸ்ட் 27) காலை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வசந்தி, அவரது சகோதரருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர் வசந்தியைப் படம் பிடித்ததால் அவரது கணவர் உள்ளிட்டோர் செய்தியாளரைத் தாக்க முயன்றனர். மேலும் கேமராக்களையும் பறிக்க முயன்றனர்.
தொடர்ந்து, இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அப்போது வசந்தி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் கண்ணன் நீதிபதியிடம் குறுக்கீட்டு மனு அளித்தார்.
பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அனுராதா, வசந்தியை செப்டம்பர் 9ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கையூட்டு வாங்கிய போக்குவரத்து காவலர் பணியிட மாற்றம்