மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த வீரர்கள் சிலர் எருமை மாட்டுடன் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். அப்போது பயிற்சி மையத்தின் செயலாளர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை உயர் நீதிமன்ற உத்தரவு 520/2020-ன்படி மாவட்ட ஆட்சியரே நேரடியாக நடத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டும் தான் அனுமதிக்க வேண்டும். பிற ஜாதி சிந்து காளைகளை அனுமதிக்கக் கூடாது அப்படி அனுமதித்தால் எருமை மாட்டையும் அனுமதிக்க வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மரணம் அடைந்தால் இழப்பீடாக ரூ.3 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள 1200 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படுகின்றன. 600 காளைகள்தான் அவிழ்த்து விடப்படுகின்றன. இதனால் மாட்டின் உரிமையாளர்களுக்கும் காவலர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மதுரை மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!