மதுரை: கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிக்கை குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டுமுதல் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்று பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் சக்திநாதன், துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது இணையதளம் மூலமாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 200 கோடி ரூபாய்வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய்வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைவேந்தர் சூரப்பா தனது மகளை சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மின்னஞ்சல் முகவரி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் கொடுத்துள்ள முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக உள்ளன.
இந்தப் புகாரில் உண்மைத்தன்மை இல்லை. இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் நவம்பர் 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை கலங்கப்படுத்துவதாகவும், அதில், மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களைக் களங்கப்படுத்துவதாகவும் உள்ளது. துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. உயர் அலுவலர் மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அரசாணை வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்காலத் தடைவிதிக்கவும், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்" எனவும் கோரப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு பைசாகூட கையூட்டு பெறவில்லை, விசாரணையை எதிர்கொள்ளத் தயார்' - துணைவேந்தர் சூரப்பா