மதுரை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம், இந்து மக்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் மிரட்டல் விடும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் பேசினார். இது தொடர்பாக, சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுசீந்திரன், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் வாய்ப்பிருப்பதால், அதுவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அரசுத்தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.
இதையேற்ற நீதிபதி, சுசீந்திரனை வழக்கு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்ய வேண்டாமென அறிவுறுத்தி வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் உள்ள டாடா நிறுவனத்துக்கு வடமாநிலத்தில் இருந்து பணியாளர்கள் - வேல்முருகன் கண்டனம்