மதுரை பீபிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாவோயிஸ்ட் விவேக். மாவோயிஸ்ட் அமைப்பின் ஆதரவாளரான இவர் மீது மதுரை மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 1) தனது முகநூல் பக்கத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் துணை ஆய்வாளர் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஆதரவாகவும், மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பெண்கள், இளைஞர்கள் பயிற்சி எடுப்பது போன்ற புகைப்படங்களையும் முகநூலில் வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக மாவோயிஸ்ட் விவேக் மீது வழக்கு பதிந்த மதுரை தல்லாகுளம் காவல்நிலைய காவல்துறையினர், அவரை இன்று (செப்டம்பர் 2) கைது செய்தனர்.
மாவோயிஸ்ட் அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்திய ஜனநாயகத்திற்கும், ஆட்சிக்கும் எதிராக பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக மாவோயிஸ்ட் விவேக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.