ராணி கோப்பெருந்தேவியின் காற்சிலம்பைத் திருடியதாகக் குற்றம்சாட்டி கோவலனின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்களத்திற்கே நேரில் சென்று, மன்னவன் இழைத்தது அநீதி என உரைத்து நிரூபித்த கண்ணகியின் செயலுக்கு ஒப்பானதே அற்புதம்மாள் தனது மகனின் நீதியை வென்றெடுத்த கதை.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொல்வதற்குப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பேட்டரியை வாங்கித் தந்தார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் பதின்ம வயது பேரறிவாளன் கைது செய்யப்பட்டபோது, இளம் தாயாக அற்புதம்மாள் எத்தனை துடிதுடித்துப் போயிருப்பார். 'விசாரணை செய்துவிட்டு காலையில் அவரை விட்டுவிடுவோம்' என்று இரவில் அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஆனால், 31 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியான வேளையில் தான் அவரை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள் எனும்போது எத்தனை வலிக்கும்..? அப்படியொரு வலியைச் சுமந்துதான் கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதியிலிருந்து தனது மகனுக்கான நீதியைப் பெற இந்தியாவின் அனைத்து சட்ட வல்லுநர்கள், அரசியல்வாதிகள் வீடுகளின் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.
கோழி தன் குஞ்சுகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது பெரிதல்ல... அவை ஓரளவிற்கு வளரும்வரை எதற்கும் இரையாகாமல் பாதுகாப்பது எத்தனை பெரிதோ... அவையெல்லாவற்றையும்விட பெரிதாக இருந்தது தன் மகனை தூக்குக் கயிறு அண்டாமல் பாதுகாத்த அற்புதம்மாள் இடையறாத முயற்சி. துள்ளித் திரிய வேண்டிய தனது ஒரே மகனின் இளமைப் பருவம் 'காராக்கிரகத்தில்' தொலைந்ததை எண்ணி எண்ணி ஒரு தாய் எவ்வாறெல்லாம் அழுது துடித்திருப்பாள் என்பதை அறிவம்மாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
தன்னுடைய மகனைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாசப்போராட்டம் மட்டுமே தனக்குள் நிறைந்திருந்ததாகக் கூறும் அற்புதம்மாள், எந்த சூழ்நிலையிலும் தான் மனம் தளரவில்லை, அதற்கு அனுமதிக்கவும் இல்லை என்பதை பல நேர்காணல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். அவருடைய இந்த தொடர் முயற்சியின் விளைவாகத்தான் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், இந்த வழக்கு குறித்த நேர்மையான வாக்குமூலத்தை அளித்தார்.
அதுதான் பேரறிவாளனின் இன்றைய விடுதலைக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோன்று வீட்டுக்கும் சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் நடையாய் நடந்த அற்புதம்மாளின் பாதயாத்திரைகள்தான் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட ஜெயலலிதா முதல் ஸ்டாலின் வரை அவர்களின் மனசாட்சியைத் திறந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கே. பழனிசாமி, முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து தனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தவர் அற்புதம்மாள். அப்போது முதலமைச்சராக இருந்த பழனிசாமியை சந்தித்தபோது, தனது மகனை சிறையில் இருந்து விடுவிப்பதாக ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பழனிசாமியும் தனது தலைவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. ஏறக்குறைய 3 தசாப்தங்களாக சிறைவாசம் காரணமாக பல நோய்களுடன் போராடி வரும் தனது மகனின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர கருணை கொலை செய்யக் கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அற்புதம்மாள் கடிதம் எழுதினார்.
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முதல் முறையாக 2017ஆம் ஆண்டு பரோல் பெற்றார். அதைத் தொடர்ந்து, அவர் இதேபோன்ற நிவாரணங்களைப் பெற்றார் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் ஜாமீன் பெற்றார். தனக்கு கிடைத்த புதிய சுதந்திரம் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பேரறிவாளன், தான் சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புவதாக கூறினார். இந்நிலையில் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, அற்புதம்மாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனாலும், அவரது தவிப்பு எல்லாம், தன் மகன் நிரபராதி என்ற தீர்ப்புடன் பொதுச்சமூகத்தில் கலந்து உறவாட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட பரோல் விடுமுறையை 10ஆவது தடவையாக நீட்டித்து, அற்புதம்மாளின் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்தது. பழ.நெடுமாறன், வைகோ, நீதியரசர் கிருஷ்ணய்யர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பையும் அற்புதம்மாள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவுகூறி நன்றி பாராட்டத் தவறவில்லை.
இதுவரை தொடர்ந்து வந்த அற்புதம்மாளின் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரடங்கிய அமர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று (மே 18) பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதத்தால் நடைபெற்ற தமிழினப்படுகொலை காரணமாக, ஒவ்வோராண்டும் மே 18ஆம் தேதி உலகத் தமிழர்களுக்கு துயரம் தோய்ந்த நாளென்றாலும்கூட, சற்றே நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக பேரறிவாளன் விடுதலை இன்றைய தினத்திலேயே அமைந்திருப்பது வேதனைக்குரிய முரண்.
தோள் பை, கையில் சுமக்கும் கட்டைப் பை, கண் கண்ணாடி, நரைத்த தலை, மிகச் சாதாரணமான நூல் சேலை ஆகியவைதான் அற்புதம்மாளின் தோற்றம். இந்தக் காட்சிப் பதிவு தமிழர்களின் நெடுங்கால மனப்பதிவாகவே இருக்கும். தனது மகன் பேரறிவாளனின் எதிர்கால வாழ்வுக்கு தயார்ப்படுத்துவதுதான் அற்புதம்மாளின் ஒற்றைக் கனவாக அவரது வாழ்க்கை இனி இருக்கப் போகிறது.
நடந்து நடந்தே தேய்ந்த அவரது பாதங்கள், மகனின் கனவு வாழ்க்கையைப் பரிசளிப்பதற்காகவே இனி அந்தரத்தில் மிதக்கும். அன்பு, அறிவு, அருள் ஆகியவை குடி கொண்ட குயில்சோலையாகவே ஜோலார்பேட்டையிலுள்ள பேரறிவாளனின் வீடு அற்புதம் நிறைந்ததாக இனி இருக்கும். நீதி வென்றதோ இல்லையோ, நிச்சயம் தாய்மை வென்றது, ஆம் பேரறிவாளனை மீண்டும் ஈன்ற இந்தப் பொழுது நிச்சயம் அற்புதத்தாய் நிகழ்த்திய அற்புதம்தான்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?