மதுரை: துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்வதோடு, நிரந்தரமாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குழி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இங்கு மகப்பேறு பரிசோதனை, மகப்பேறு கவனிப்பு, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கான வசதிகளும், அவர்கள் பரிசோதனை செய்வதற்காக படுக்கை வசதிகள், மருத்துவ உதவியாளர் தங்குவதற்கு குடியிருப்பு ஆகியவை இணைந்து உள்ளன.
ஊத்துக்குழியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், இந்த துணை சுகாதார நிலையத்தைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த இருபது ஆண்டு காலமாக இந்த துணை சுகாதார நிலையத்திற்கு சுற்று கிராம மக்கள் வருவதைத் தவிர்த்தனர்.
காரணம் இந்த நிலையத்தில், மருத்துவர் இல்லாததால் செவிலியர் மட்டுமே இருந்து முதலுதவி செய்து வருகின்றனர். இதனால், இப்பகுதி கிராம மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, "கடந்த 20 ஆண்டு காலமாக துணை சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது குறைந்துள்ளது. இதனால் இங்கு மருத்துவ உதவியாளர்கள் தங்குவது இல்லை. காலப்போக்கில் இங்குள்ள கட்டடம் இடிந்து பெயரளவில் உள்ளது.
ஆகையால், துணை சுகாதார நிலையத்தைச் சீரமைப்பதுடன், மேலும் பல அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகளோடு விரிவாக்கம் செய்ய வேண்டும். நிரந்தரமாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் இல்லத்தில் பாஜக மேலிடத் தலைவர்கள் திடீர் ஆலோசனை: பின்னணி என்ன?