காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக கிருஷ்ணன் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், துணைவேந்தர் கிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது, "1966ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உதயமானது. அன்றிலிருந்து தற்போது வரை எண்ணற்ற ஆய்வுகள் இங்கே நடைபெற்றுள்ளன. அவை அனைத்திற்கும் தற்போது காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக பல்கலைக்கழகப் பேராசியர்கள், வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வுகள் அனைத்திற்கும் காப்புரிமை பெறுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிக காப்புரிமை பெற்ற கல்வி நிறுவனமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திகழும்.
ஒரு பல்கலைக்கழகம் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கான அடிப்படைக் காரணிகளுள் ஒன்றுதான் இந்தக் காப்புரிமை. இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வெறும் வெளியீடுகளாக மட்டுமன்றி, முறையான காப்புரிமை பெறுவதன் மூலம் சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் அந்த ஆய்வுகள் அனைத்தும் மாறும். இதன் மூலமாக பல்கலைக் கழகத்திற்குத் தேவையான நிதி வசதிகளும் பெருகும். ஆகையால், அந்தப் பணிகளை விரைவில் தொடங்கவிருக்கிறோம்" என தெரிவித்தார்.