சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'புதுக்கோட்டை மாவட்டம் வாழைக்குறிச்சியில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது, இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் சாதியை அடையாளப்படுத்தும் நோக்கில் அவர்களது தெருக்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பின் தங்கிய வகுப்பு மாணவர்களை துப்புறவுப் பணிகளில் ஈடுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே, மாணவர்களுக்கு சாதி பெயர் தெரு அடிப்படையில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நீக்க வேண்டும், மேலும் பள்ளியில் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.