திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாபநாசம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் முன்பாக முறையிட்டார்.
அதில், " பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட முத்துமனோ மற்றும் அவரது நண்பர்களைக் கைதிகள் கும்பலாக கூடி தாக்கிய நிலையில், பலத்த காயம் அடைந்த முத்து மனோ நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகவே, முத்து மனோவின் உடற்கூறாய்வை முழு வீடியோ பதிவு செய்யவும், கவனக்குறைவாகச் செயல்பட்ட சிறைத்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இதை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
அப்போது அரசு தரப்பில் வழக்குப் பதியப்பட்டு நீதித்துறை நடுவர் இந்த வழக்கை விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி இதை மனுவாகத் தாக்கல் செய்த பின்னர் வழக்கு விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு: ஆம்புலன்சிலிருந்து கீழே விழுந்த உடல்... ஷாக்கிங் வீடியோ!