மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மதுரையில் கோலாகலமாக திருவிழா போன்று இந்த ஜல்லிக்கட்டைக் கொண்டாடுகின்றனர். தை மாதம் முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் மாடு பிடி வீரர் கார்த்திக் என்பவர், 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூரிலும் நடைபெறுகிறது.
தற்போது விறுவிறுப்பாக பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியானது, காலை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் துவங்கப்பட்டது. முன்னதாக 8 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க சுமார் 3 ஆயிரத்து 677 காளைகளும், 1,412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்த நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, ஆயிரம் காளைகளும், 700 மாடு பிடி வீரர்களும் தேர்வாகி போட்டிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில், ஒவ்வொரு சுற்றிலும் 50லிருந்து 75 மாடுகளை அவிழ்க்கப்பட்டு வருவதாகவும், 4 சுற்றுகள் முடிவில் 370க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அதில் மாடுபிடி வீரர்கள் 10 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 7 பேரும், பார்வையாளர்கள் 5 பேரும், காவல்துறை 2 என 24 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 3 பேர் மேல்சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடு பிடி வீரருக்கு காரும், 2ஆம் இடம் பிடிக்கும் வீரருக்கு இருசக்கர வாகனமும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்படவுள்ளது. மேலும், நாளை (ஜன.17) அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது மாடு பிடி வீரர் களத்தில் தீயாய் மாடுகளை அடக்கி வருகின்றனர். மேலும், போட்டியில் காளை மாடுகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் அண்டா, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகளை தட்டிச் செல்கின்றனர். தற்போது வரை 6வது சுற்றில் சந்தன நிற உடை அணிந்து மாடு பிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். மேலும் இந்த சுற்றில், காளைகளை மாடுபிடி வீரர்கள் சரிவர அடக்கவில்லை எனவும், காளைகள் தாமதமாக இறக்கி விடப்படுவதாகவும் வருணனையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை கொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், சுமார் 8 மாடுகளை பிடித்து முதல் இடத்தில் நீடித்து வருகிறார். மேலும், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் கொந்தகையைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் தலா 6 மாடுகளை அடக்கி 2ஆம் இடத்தில் நீடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகர சங்கராந்தி: தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்!