மதுரை : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் பிப்.26 ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே, ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மாநில தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு உத்திகளை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பரப்புரைக்கு தோள்கொடுக்கும் வகையில், திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் முன்பு எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என பதாகை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தம்பதியருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை பகுதியில் அம்பேத்கர் காலனியில் லோகராஜ் - சுப்புலட்சுமி தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வசித்து வருகின்றனர். லோகராஜ் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டு வாசலில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என தேர்தல் ஆணையமும், அரசு நிர்வாகமும் பரப்புரை செய்துவருகின்றன. இந்நிலையில், அதற்கு ஆதரவளிக்கும் விதமாகவும், வாக்கை நியாயமாக செலுத்துவோம் என்பதை சக வாக்காளர்களுக்கு உணர்த்தவும் இந்த பதாகையை வைத்துள்ளோம்.
இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இதுபோன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என முன்வருவர்” என கூறுகின்றனர்.
மக்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த தம்பதியின் முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தம்பதியருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.
இதையும் படிங்க : பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!