மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"தமிழ்நாடு அரசின் சார்பில் 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு, குடியரசு தலைவருக்கு அனுப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆளுநருக்கு அரசின் சார்பாக வலியுறுத்தி வருகின்றோம். இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டு குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திமுகவும் தினகரன் அணியும் கூட்டணி வைத்துள்ளன என்று ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம். தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார் உள்ளது. அதனை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதிமுக வெற்றி பாதிப்படையுமா போன்ற யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது. தேர்தல் முடிவுக்கு பின்புதான் எதுவும் கூற முடியும்" என்றார்.