மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறிநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் ரகசியமாக கண்காணிப்புப் பணி மேற்கொண்டதில், கைத்தறி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 54), இடியாப்ப ரவி (55), கிருஷ்ணா ராவ் (55), கோபிநாத் (36), கேரளா சுரேஷ் (36) ஆகிய ஐந்து பேரும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 செல்போன்கள், 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அண்மையில் 3ஆம் நம்பர் லாட்டரியால் நகைத் தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் 3ஆம் நம்பர் லாட்டரி குறித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கைத்தறி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..