மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தாய் தந்தை இல்லாத காரணத்தால் தன்னுடைய தாத்தா வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சுந்தரம் என்ற முதியவர் சிறுமிக்கு அடிக்கடி உணவு பண்டங்கள் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியை அரசு விடுதியில் சேர்ப்பதற்காக அவருடைய தாத்தா அழைத்துச் சென்றபோது அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மருத்துவ அறிக்கையில் சிறுமி பலமுறை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் மேற்கூறிய முதியவர், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவரை சாலையில் ஓட ஓட விரட்டி அடித்து ரத்த வெள்ளத்தில் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.