மதுரை: மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காரியாலயத்தைத் திறந்து வைத்த செல்லூர் ராஜு, பின்னர் தேர்தல் வெற்றிக்கான செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடத்தில் பேசினார். அவை பின்வருமாறு:
"ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம், இல்லத்தரசிகளுக்கு 1,500 ரூபாய் திட்டங்களே போதும், நாம் ஆட்சிக்கு வந்து விடுவோம். இது தவிர கூட்டுறவு வங்கி நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றையும் முதலமைச்சர் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார். என்னைப் பற்றி பலர் மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அவற்றைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி" என்றார்.
செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுற்ற பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசிய நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளதைப் பற்றி செய்தியாளர்கள் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ”ஜெயலலிதாவின் மறைவிற்குக் காரணமே திமுக கொடுத்த நெருக்கடிதான். பொய்யான வழக்கை உண்மையான வழக்காக மாற்றி மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு காரணம் மன அழுத்தம்தான். ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்குகூட மனமில்லாமல் வழக்கு தொடுத்தவர்கள் தான் திமுகவினர்.
தேர்தலுக்காக பெண்களின் வாக்கு வங்கியைப் பெறும் நோக்கில், இது போன்ற பொய்யான நாடகத்தை தேர்தல் அறிக்கை வழியாக தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் உள்ளது, முடிவுகள் விரைவில் தெரியவரும். மேலும் திமுக அறிவித்த திட்டங்கள் எதையுமே அவர்கள் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொன்னார்கள். எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க : 1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!