மதுரையில் உள்ள அரசு இராசாசி மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் 111 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 9ஆம் தேதி புதிதாகக் கரோனாவால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தற்போதுவரை 110-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், மே 9ஆம் தேதி நிலவரப்படி கூடுதலாக மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளைத் தவிர அதிக நபர்கள் வருவதைத் தடுக்க அந்த மருத்துவமனையைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையும், மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன.
இதனால் அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 535 ஆக உயர்வு!