மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் நிர்மலாதேவியை அழைத்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், "அரசியல் பின்னணி காரணமாக பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு 11 மாதங்களாக பேராசிரியர் நிர்மலாதேவி சிறையில் இருந்தார். நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட உடன் 24 மணி நேரத்தில் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து சந்தானம் கமிட்டியை அமைத்தார். ஆனால், உலகமே அதிர்ந்த பொள்ளாச்சி சம்பவம் பற்றி ஏதும் பேசவில்லை.
பல்வேறு இடையூறுகள் நீண்டபோராட்டத்திலிருந்து நிர்மலாதேவி வெளிவந்துள்ளார். இவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக பல்வேறு இடையூறுகள், அரசியல் தலையீடுகள் என பல தரப்பில் இருந்தும் வந்தது. ஜாமின் வழங்கியும் ஒரு வார காலம் சிறையிலிருந்து வெளிவர முடியாதவாறு பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
நிர்மலாதேவி மீதான வழக்கு பொய் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். உறவினர்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல்வாதிகள் சந்திக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும்வரை முழு ஒத்துழைப்பு கொடுப்பார்", இவ்வாறு கூறினார்.