தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அதற்கு ஏற்ப பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 பேருந்து பணிமனைகளில் 600 மாநகர் பேருந்து, 210 புறநகர் பேருந்து உள்ளிட்ட மொத்தம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையத்திலிருந்து வெளியூர் புறப்படும் பேருந்துகளின் கடைசி நேரங்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னைக்கு நண்பகல் 12 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். தற்போதைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து செல்லும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல்,"சேலம், கோவை, ஈரோடு, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு மாலை 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல், கொடைக்கானலுக்கு மாலை 5.45 மணி வரையிலும், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், தென்காசி ஆகிய ஊர்களுக்கு மாலை 6 மணி வரையிலும்,கரூர், கம்பம், பழனி, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு மாலை 7 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், இராஜபாளையத்திற்கு இரவு 7.30 மணி வரையிலும், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய ஊர்களுக்கு இரவு 8 மணி வரையிலும், நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை, நத்தம் ஆகிய ஊர்களுக்கு இரவு 8.30 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும்.
கடைசி நேரத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வழித்தடங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும், சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.