இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய அளவிலான நீட் தகுதித் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதில், மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மதுரையிலுள்ள 35 கல்வி நிறுவனங்களில் இத்தோ்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 15,033 பேருக்கு தோ்வெழுத இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கரோனா தொற்றுப் பரவல் காரணத்தினால் தேர்வர்களுக்கு இந்த முறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் தேர்வர்கள் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும் என்றும், தகுந்த இடைவெளியைக் கட்டாயம் தேர்வர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதற்கு 50 ml அளவிலான சானிடைசர் எடுத்து வர வேண்டும் என்றும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தேர்வுக்குத் தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீட் தேர்விற்காக மதுரையில் மாட்டுத்தாவணி எம்ஜிஆா், ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களிலிருந்து தோ்வு மையங்கள் அமைந்துள்ள வழித்தடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக காலை முதலே அந்தந்த தேர்வு மையங்களில் அதிக அளவில் தேர்வர்களும் பெற்றோரும் காத்திந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நீட் அச்சம்: மேலும் ஒரு தற்கொலை!