மதுரை: மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறை, மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் 'உத்கிருஷ்ட சேவா விருது', 'அதி உத்கிருஷ்ட சேவா விருது' என்னும் இரண்டு விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த தேசிய விருதுகளுக்கு மதுரை கோட்டத்தில் பணியாற்றும் மூன்று ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய விருதுக்கு மூவர் தேர்வு:
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தலைமை காவலராகப் பணி புரியும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் என். விசாகரன், செங்கோட்டை தலைமைக் காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் டி.ஆறுமுக பாண்டியன், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேசிய அளவிலான 'உத்கிருஷ்ட சேவா' விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சாதனை படைத்த வீரர்கள்:
இதில், ஆறுமுக பாண்டியன் ஒரு விளையாட்டு வீரர். இவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ரயில்வே துறை குற்ற வழக்குகளை விரைவாக கையாண்டு சாதனை புரிந்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பாலசுப்பிரமணியம், விசாகரன் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு உதவுவது, ரயில்வே துறை சொத்துகளைப் பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்வதேச விருது பெற்ற தமிழ்நாடு வனச்சரகர்!