மதுரை: சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்த மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இலங்கை வாழ் சைவ மக்கள் சார்பில் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள பிரார்த்தனைச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
சைவம், தமிழுக்காக தொண்டு செய்த ஆதீனம்
யாழ்ப்பாணம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் தாய்வீடாகத் திகழ்வது மதுரை ஆதீனம் ஆகும். இந்த ஆதீனம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாண்டிநாட்டில் தங்கி இருந்த பெருமைக்குரிய இடம் ஆகும்.
இத்தகைய பக்திச் சிறப்பு மிக்க மதுரை ஆதீனத்தின் 291ஆவது முதல்வரின் ஆசியுடன், 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் எமது குருநாதரால் சைவ ஆதீனம் நிறுவப்பட்டது. அதன் போது ஆதீன முதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தனது குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளது பெயரையே எமது குருநாதருக்குச் சூட்டி நல்லை ஆதீனத்தை நிறுவ உத்தரவளித்தார்.
மதுரை ஆதீன முதல்வர் சைவத்திற்காகவும், தமிழுக்காகவும் தொண்டு செய்த பெருந்தகை. சமய நல்லிணக்கம் குறித்து மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததோடு இலங்கை வாழ் சைவ மக்கள் குறித்தும் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டார். எம்முடன் பேரன்பு கொண்டிருந்தார். எமது நல்லை ஆதீனச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கினார்.
ஆதினத்துக்கு பிரார்த்திப்பு
எமது அன்னை ஆதீனத்தின் முதல்வராக 40 ஆண்டுகள் விளங்கி, இன்று தனது சிவலோக வாழ்வு பெற்ற குருமகாசந்நிதானம் அவர்களுக்கு எமது பிரார்தனைகளைத் தெரிவிப்பதுடன், புதிதாக 293ஆவது குருமகா சந்நிதானமாக பொறுப்பேற்றுள்ள சுவாமி அவர்கள் தனது காலத்தில் சைவத்திற்கும், தமிழுக்கும் சிறந்த தொண்டாற்ற இறை திருவருள் நாடிப் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனைத்து அரசியல் தலைவர்களிடம் நட்புரிமை பாராட்டியவர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்!