ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த 2014ஆம் ஆண்டு, 13½ கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. விழா நிறைவு பெற்ற பின்பு, தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரையில் உள்ள 'பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட அறங்காவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை 28ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி தங்க கவசத்தை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வந்து ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்பு வங்கி அலுவலர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க கவசத்தை எடுத்து அவரிடம் வழங்கினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தேவரின் தங்க கவசத்துக்கு மாலை அணிவித்து, விழா குழுவினரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழா முடிவடைந்ததையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க பலத்த பாதுகாப்புடன் விழா குழுவினர் வந்தனர். துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திடம் விழா குழுவினர் அக்கவசத்தை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அலுவலர்களிடம் முறையாக கோப்புகளில் கையழுத்திட்டு கவசத்தை ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: தேவர் குருபூஜைக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எட்டுபேர் படுகாயம்!