கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சி பல்வேறு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் மேற்குறிப்பிட்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விளாங்குடி, செல்லூர், ஆணையூர், பெத்தானியாபுரம், தத்தனேரி, கோ.புதூர், அண்ணாநகர், ஆத்திகுளம், காமராஜர் சாலை, வில்லாபுரம், கீழமாசிவீதி, பிள்ளையார் பாளையம் ரோடு, பழங்காநத்தம் ஹாஜிமார் தெரு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 28 கடைகளை மதுரை மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மதுரையில் உள்ள அனைத்துக் கடைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அதனை தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையர் விசாகன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் 30 கடைகளுக்கு சீல் வைப்பு!