சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம்(53) இயற்கை வளப் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூகப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இவர், பிறகு மாயமானார்.
அதன்பின் அவரை மீட்க ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் அவர்மீது கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனால் சிபிசிஐடியினர், முகிலன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த நிலையில், முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முகிலன், தான் கடத்தப்பட்டதாக ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர், முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் அவர் கடத்தப்படவில்லை, அவர் மீது பாலியல் குற்றசாட்டு உள்ளதால் தலைமறைவாகிவிட்டார் எனவும் வாதாடினார். மேலும் அவருக்கு ஜாமின் வழங்கினால் மீண்டும் தலைமறைவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து முகிலன் கடத்தப்பட்டாரா? தலைமறைவானாரா? என்பது குறித்து அவர் தரப்பில் தெளிவு படுத்தப்பட்டால், ஜாமின் வழங்க பரிசீலிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கனிமொழி மீதான தேர்தல் வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!