நாடு முழுவதும் கரோனா வைரஸின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் அதிகப்படியான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் உயிருக்காக போராடி வருகின்றனர். நிலைமையை புரிந்துகொண்டு பலர் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளும், இந்தியாவிற்கு தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா தவித்து வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் பிரதமருக்கு 13 ஆயிரம் கோடி செலவில் வீடு கட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கு தற்போது ஆக்சிஜன் தான் தேவை, புதிய வீடு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், " பிரதமர் நரேந்திர மோடி சுமார் 13,450 கோடி ரூபாய் மதிப்பில் தனக்காக பிரமாண்டமாக புதிய மஹாலை கட்டி வருகிறார். கோவிட் பெருந்தொற்று காலத்தில், இதற்கு செலவழிக்கப்படும் பணத்தை கொண்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டியிருக்க முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி இருக்க முடியும். 40 மெகா கரோனா மருத்துவமனைகளை கட்டியிருக்க முடியும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 6000 கோடி நிவாரணம் வழங்கி இருக்க முடியும். ஆனால், இதை செய்யாமல், மக்கள் மேல் அக்கறையற்று புத்தம் புதிய மஹாலை தனக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி" எனப் பதிவிட்டுள்ளார்.