மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் மு.வ. அரங்கில் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆட்சி பேரவையின் உறுப்பினர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறை பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேராசிரியர்கள் தீனதயாளன், சைலஜா உள்ளிட்ட ஆட்சிப் பேரவை உறுப்பினர்களும், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கண்ணன், ஜெனிபா பொன்னுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சங்கர் நடேசன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.
பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தடயவியல் மற்றும் குற்றவியல் துறை, நுண்ணுயிரியல் துறை உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் குறித்தும் அதற்குரிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், ஆய்வுக்குரிய முயற்சிகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும் மூத்த பேராசிரியருமான சின்னையா, பொறுப்பு துணைவேந்தர் பதவியை மூத்த பேராசிரியருக்கு வழங்கும் பொருட்டு ஆட்சிப் பேரவை தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து ஆட்சி பேரவை குழுவினர் விவாதித்து அந்தத் தீர்மானத்தை நிராகரித்தனர்.
வரும் கல்வியாண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ள அல்லது முன்னர் அறிமுகப்படுத்தி இருக்கின்ற பல்வேறு படிப்புகள் குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆட்சிப் பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போராட்டம் தொடரும் - சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டவட்டம்!