முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்து இன்று (ஜன. 3) தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மதுரை பாண்டி கோவில் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜன. 3) மாலை 4 மணி முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக அழகிரி ஆதரவாளர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது, திமுகவில் மீண்டும் இணைவது, தங்களது ஆதரவை யாருக்கு அளிப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு முக்கிய முடிவினை அவர் எடுக்க உள்ளார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு நிச்சயமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மு.க. அழகிரி தனது முடிவை இன்று (ஜன. 3) அறிவிப்பாரா அல்லது வரும் 30ஆம் தேதி அவரது பிறந்த நாள் தினத்தில் அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க...கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!