மதுரை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட திமுக சார்பில், மதுரைக் கல்லூரி மைதானத்தில், திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,001 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.
எந்த இயக்கமும் செய்யாததை திமுக செய்துள்ளது: விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது, "எந்த மாவட்டத்திற்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அது அரசு நிகழ்ச்சியோ, கட்சி நிகழ்ச்சியோ, திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சியோ எதற்கு அழைத்தாலும், அந்த மாவட்டச் செயலாளர்களிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைப்பேன்.
அந்த வகையில் திமுக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 30 மாவட்டங்களுக்கு சென்று 40 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்கத் தொகை மற்றும் பொற்கிழி வழங்கி கெளரவித்து இருக்கிறது. இந்தியாவில் எந்த இயக்கமும் செய்யாததை திமுக செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அந்த இயக்கத்தின் கொள்கைகள் பற்றியோ, அந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியோ பேசப்படவில்லை.
சேலத்தில் திமுக மாநாடு: மறுநாள் அந்த மாநாட்டில் பரிமாறப்பட்ட சாம்பார் சாதம், புளிசாதம் பற்றியே பேசு பொருளாக இருந்தது. ஆனால் சேலத்தில் நடத்தப்போகிற இளைஞரணி மாநில 2ஆவது மாநாடு, இப்படி ஒரு மாநாடு இந்தியாவிலேயே நடக்கவில்லை என்ற அளவிற்கு நடக்கப் போகிறது. கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதற்காக எனது தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டது.
சனாதனத்தை ஒழித்து பல வருசமாகி விட்டதா?: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று, சனாதனத்தை ஒழிச்சு பல வருசமாகி விட்டதாக என சொல்லி இருக்கிறார். நான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன். நான் செல்லூர் ராஜூக்கு சவால் விடுகிறேன். அமித்ஷாவிடமும், மோடியிடமும் சனாதனத்தை ஒழித்து விட்டோம் என தைரியமாக சொல்ல முடியுமா?.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கே 10 கோடி ரூபாய் என்றால், சனாதனத்தை ஒழித்து விட்டதாக சொல்லும் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி?. உதயநிதி ஒரு நடிகர். அவருக்கு நடிப்தை தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்கிறீர்கல். அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்தார்கள்?
ஒரு கி.மீ சாலைக்கு 250 கோடியா?: கடந்த 9 வருடங்களில், மத்திய அரசால் ஏழரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் விரைவு சாலைத் திட்டத்தில், ஒரு கி.மீ சாலை அமைக்க 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள்.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதாக பொய்க் கணக்கு காட்டி உள்ளார்கள். இதைத்தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் பொய் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: "வளர்ச்சி திட்ட பணிகளில் தொய்வு" - ஓபனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்!