மதுரை அருகே உள்ள மாடக்குளம் கண்மாயில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "மதுரையின் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வந்தன. மாடக்குளம் கண்மாயில் கரை உயர்த்தி தூர்வாருதல், வாய்க்கால்களை சரிசெய்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மதுரையை பொருத்தவரை நாள்தோறும் ஆயிரத்து 500 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கரோனா தொற்று குறித்து பொது மக்களிடம் மெத்தனமான மன நிலையே உள்ளது. பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போதைய சூழலில் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் கரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க அமல்படுத்தப்படும் ஊரடங்கு தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல்: உயிரிழந்த ராணுவ வீரருக்கு சிலை வைக்க கோரிக்கை!